திருவண்ணாமலை: சாலை சேற்றில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்


திருவண்ணாமலை: சாலை சேற்றில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
x

வந்தவாசி அருகே புதிய சாலை அமைக்கக் கோரி சேதமடைந்த சாலை சேற்றில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம், சாத்தனூர் ஊராட்சிக்கு உள்பட்டது கோயில்குப்பம் கிராமம். வந்தவாசி-விளாங்காடு சாலையில் உள்ள ஆரியாத்தூரிலிருந்து கோயில்குப்பம் கிராமத்துக்குச் செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் மழையின் காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் இந்த சாலை சேறும் சகதியுமாக ஆனது. இந்த நிலையில் புதிய சாலை அமைக்கக் கோரி அந்த கிராம பெண்கள் அந்த சாலை சேற்றில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தார்ச் சாலை போடப்பட்டது. போட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை சேதமடைய தொடங்கியது. காலப்போக்கில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் சேதமடைந்து விட்டது.

மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவியர் மற்றும் பைக்குகளில் செல்வோர் சேற்றில் சிக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புதிய சாலை அமைக்கக் கோரி சாலை சேற்றில் நாற்று நடும் போராட்டம் செய்கிறோம் என்றனர்.


Next Story