மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டம்


மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டம்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பசுமை ராமநாதபுரம் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

பசுமை ராமநாதபுரம் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

பசுமை மாவட்டம்

வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மழை பொழிவு மற்ற மாவட்டங்களை விட மிகக்குறைவுதான். குடிதண்ணீர் பிரச்சினை என்பது மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தை பசுமை மாவட்டமாக மாற்ற கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன் வலசை கிராமத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள் மரக்கன்றுகள் வளர்ப்பதற்காக பாலிதீன் பைகளில் செம்மண்களை அள்ளி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மரக்கன்றுகள்

இதுகுறித்து மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பக அறக்கட்டளை மண்டபம் மண்டல அதிகாரி கவுசிகா கூறும்போது, பசுமை ராமநாதபுரம் திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்திற்குள் மாவட்டம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் இயக்குனர் பகன் ஜெகதீஷ் சுதாகர் ஆலோசனையின் பேரில் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழு மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் கலெக்டரிடம் ஜூலை மாதம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுய உதவி குழுவை சேர்ந்த 1000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் மரக்கன்றுகள் வளர்ப்பதற்காக பாலிதீன் கவர்களில் செம்மண் அடைத்து வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பூவரசு, புங்கை, புளியமரம் உள்ளிட்ட மரங்களின் விதைகளையும் தூவி வருகின்றனர் என்றார். அதே போல் மாவட்டத்தில் உள்ள அரசின் பல்வேறு துறைகளுக்கும் குறிப்பிட்ட மரக்கன்றுகள் ஜூலை மாதத்திற்குள் வழங்குவதற்கு இலக்காக கலெக்டரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story