கருகிய நெற்பயிர்களை கண்டுகதறும் விவசாயிகள்
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கத்தில் கருகிய நெற்பயிர்களை கண்டு கதறும் விவசாயிகள், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கத்தில் கருகிய நெற்பயிர்களை கண்டு கதறும் விவசாயிகள், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயமே வாழ்வாதாரம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள குலமாணிக்கம், அன்னுகுடி, ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் விவசாயத்தையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்து, அதில் கிடைக்கக்கூடிய வருமானத்தை கொண்டே பெரும்பாலான மக்கள் தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சாகுபடி பணிகளுக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அப்பகுதியில் உள்ள வெண்ணாற்றில் வரத் தொடங்கியதையடுத்து குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடியில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டனர்.
அனலாய் தாக்கும் வெயில்
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கி இன்று ஆறுகளில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டது. இது ஒரு புறம் இருந்தாலும், விவசாயிகள் எதிர் பார்த்த மழையும் பெய்யவில்லை.
மாறாக அக்னி நட்சத்திரத்தையும் மிஞ்சும் அளவிற்கு அனலாய் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் குலமாணிக்கம், அன்னுகுடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்த பல வயல்களில் பயிர்கள் வளர தொடங்கிய நிலையில், தண்ணீரின்றி பயிர்கள் கருகிப்போய் விட்டன.
பயிர்கள் கருகின
இதனால் அப்பகுதி விவசாயிகள் கடுமையான மன உளைச்சல் அடைந்து காணப்படுகின்றனர். சில விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்கு சென்று கருகிய பயிரை கண்டு வயலில் விழுந்து கதறி அழுகின்றனர்.
தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டதோ என்ற துயரத்திலும் ஒரு சில விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று குலமாணிக்கத்தில் உள்ள ஒரு வயலில் கருகிய பயிர்களை கண்ட விவசாயிகள், வயல்களில் கண்ணீர் வடித்து கவலையுடன் உட்கார்ந்திருந்தனர்.
நிவாரணம் வழங்கினால் மட்டுமே...
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இது போன்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. கருகிய பயிர்களை கண்ட பிறகு சாப்பிடக்கூட முடியவில்லை. நிம்மதியான தூக்கமும் இல்லை. எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் செய்வதற்குகூட கையில் பணம் இல்லை. சாகுபடி செய்ய வாங்கிய கடனையே அடைக்க முடியாமல் உள்ளோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே இந்த துயரத்தில் இருந்து மீள முடியும் என்று விவசாயிகள் கண்ணீர் மல்க கூறினர்.