9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா அழிப்பு


9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா அழிப்பு
x

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டதாக மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் கூறினார்.

தஞ்சாவூர்

வல்லம்:

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டதாக மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் கூறினார்.

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு

தமிழக காவல்துறை சார்பில் 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 13 ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

4,192 கிலோ கஞ்சா அழிப்பு

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் 296 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அந்தந்த மாவட்ட போலீசார் கொண்டு வந்தனர்.

இதை தொடர்ந்து 4,192 கிலோ கஞ்சாவை தனியார் தொழிற்சாலையில் உள்ள ராட்சத கொதிகலன்களில் போட்டு போலீசார் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து ஈடுபட்டனர்.

உறுதிமொழி ஏற்பு

பின்னர் போலீசார் அனைவரும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன். தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத், திருச்சி கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு.

நாகை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கபூர் மற்றும் திருச்சி மாநகர், திருச்சி மாவட்டம், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீசார் கலந்து கொண்டனர்

குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது

பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தஞ்சை அருகே அயோத்திப்பட்டியில் நடந்தது. 266 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4,192 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலம், ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சாவும் அழிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். கூடுதலாக சோதனைசாவடிகள் அமைக்கப்படும். அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகனங்களை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story