1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை,
கர்நாடகாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 1 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், 3 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
கோவை மாநகர பகுதியில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 53 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அத்துடன் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடமாநிலத்தில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனை
இதையடுத்து கோவை மாநகர போலீசார் உக்கடம் பகுதியில் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அதற்கு அவர்கள், உக்கடம் லாரிபேட்டை பகுதிக்கு செல்வதாக கூறினார்கள்.
ஆனால் அதில் இருந்த 3 பேர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த மினிலாரியில் இருந்த பொருட்களை சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
அதில் அவர்கள், கோவை கரும்புக்கடையை சேர்ந்த ஆஷிக் (வயது 25), மொய்தீன் (28) மற்றும் மினி லாரி டிரைவரான காரமடையை சேர்ந்த தேவேந்திரன் (50) என்பதும் தெரியவந்தது. கர்நாடகாவுக்கு பொருட்கள் ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு அங்கிருந்து கோவை திரும்பியபோது புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்ததுடன், 1 டன் புகையிலை பொருட்கள் மற்றும் அந்த மினிலாரியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இந்த புகையிலை பொருட்களை யாரிடம் கொடுக்க கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.