வெளி மாநிலத்துக்கு கடத்த வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் வெளி மாநிலத்துக்கு கடத்த வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் வெளி மாநிலத்துக்கு தமிழக ரேஷன் அரிசியை பதுக்கி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சதீஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் முதல்நிலை காவலர் சதீஷ் ஆகியோர் சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் ஓரம் புதர்களில் 35 மூட்டைகளில் 2 டன் எடையிலான ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வருவதைப் பார்த்ததும் ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் தப்பியோடி விட்டனர். அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வில்லை.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.






