ரெயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப்புலியின் தோல் பறிமுதல்


ரெயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப்புலியின் தோல் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

மேற்கு வங்காளத்தில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப்புலியின் தோல் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம்

விழுப்புரம்

தீவிர சோதனை

மேற்கு வங்காள மாநிலம் கரக்பூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், தனிப்பிரிவு ஏட்டு ரவி, போலீசார் வினோத்குமார், சிவராமன், விஜய், கிருஷ்ணராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சிறுத்தைப்புலியின் தோல்

அப்போது ரெயிலில் என்ஜினுக்கு அடுத்தபடியாக உள்ள பொது பெட்டியில் சோதனை செய்தபோது கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு வெள்ளை நிற சாக்குப்பை கிடந்தது. உடனே போலீசார், அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தபோது உள்ளே சிறுத்தைப்புலியின் தோல் இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அதை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அந்த தோலானது 5 அடி நீளம், 2 அடி அகலமுடையதாக இருந்தது. நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததால் சிறுத்தைப்புலியை கொன்று வேட்டையாடி பல மாதங்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதை ரெயிலில் கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? எந்த பகுதியில் சிறுத்தைப்புலியை கொன்று வேட்டையாடியுள்ளனர், அதன் தோலை எங்கு, என்ன பயன்பாட்டுக்காக கடத்திச்செல்ல இருந்தனர்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு அதை கடத்தி வந்த மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட சிறுத்தைப்புலியின் தோலை விழுப்புரம் வனச்சரக அலுவலர் பாபு, வனவர் ஜெயபால், வனக்காப்பாளர் செந்தில் ஆகியோரிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆய்வுக்கு உட்படுத்தப்படும்

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சிறுத்தைப்புலியின் தோல் சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள ஆய்வகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். அந்த தோலை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே அந்த சிறுத்தைப்புலி ஆணா, பெண்ணா, எத்தனை வயதுடையது, அதை கொன்று வேட்டையாடப்பட்டு எத்தனை மாதங்கள் ஆகிறது என்ற விவரம் தெரியவரும் என்றனர்.

ரெயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப்புலியின் தோல் கைப்பற்றப்பட்ட சம்பவம் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story