சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணமின்றி எடுத்து வந்ததால் நடவடிக்கை


சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணமின்றி எடுத்து வந்ததால் நடவடிக்கை
x

சென்டிரல் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.46 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஜயவாடாவில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது நடைமேடையில் வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒருவர் இறங்கி வருவதை போலீசார் கவனித்தனர்.

இதையடுத்து அவரை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அதில், அவர் வைத்திருந்த 2 பைகளில் உரிய ஆவணங்களின்றி ரூ.46 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த நபர் வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவி (வயது 55) என்பது தெரியவந்தது.

இவர் தான் வேலை செய்யும் வேலூரில் உள்ள நகை கடைக்கு, நகை விற்பனை செய்ததால் வர வேண்டிய பணத்தை விஜயவாடா சென்று பெற்றுக்கொண்டு, தனது ஊருக்கு செல்ல விஜயவாடாவில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்துள்ளார். உரிய ஆவணங்கள் இன்றி ரெயிலில் பணத்தை எடுத்து வந்ததால் அவரிடம் இருந்து ரூ.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story