கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
சிவகாசியில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி,
சிவகாசியில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் வெற்றிவேல், செல்வக்குமார், மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, அரவிந்த் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நீதிமன்றம் செல்லும் வழியில் இருந்த 9 கடைகளில் சிகரெட் மற்றும் பீடிகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுபோன கோழிக்கறி 3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக்பொருட்கள்
மேலும் தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு 13 கிலோ பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள் மற்றும் டீ கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் என அதி காரிகள் தெரிவித்தனர். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியின் அருகில் இருந்த கடையில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடையில் இருந்த 23 குளிர்பான பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இந்த ஆய்வு தொடரும் என வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.