வெற்றிலைக்குள் மறைத்து வைத்து தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்-ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது
வெற்றிலைக்குள் மறைத்து வைத்து தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்:
புகையிலை பொருட்கள்
தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தளவாய்பட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு ஆட்டோவில் 4 பேர் வந்தனர். அந்த ஆட்டோவில் 5 மூட்டைகள் இருந்தன. டிரைவரிடம் கேட்ட போது, தர்மபுரியில் இருந்து வெற்றிலை சேலத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது வெற்றிலைக்கு உள்ளே புகையிலை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
4 பேர் கைது
உடனே போலீசார் ஆட்டோ, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தொப்பூர் மண்டபம் தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ஆட்டோ டிரைவர் கார்த்திக் (23) என்பதும் தெரியவந்தது.
மேலும் அவருடன் வந்த தொப்பூர் சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பெருமாள் (22), தொப்பூர் ராமதாஸ்நகர் பகுதி சேர்ந்த நாகராஜ் மகன் கோவிந்தராஜ் (24), தொப்பூர் டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சென்னகிருஷ்ணன் (49) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.