உழவர் சந்தை, பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு


உழவர் சந்தை, பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு
x
தினத்தந்தி 16 Nov 2022 11:13 PM IST (Updated: 16 Nov 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

உழவர் சந்தை, பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை நகராட்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் நகராட்சி பகுதியில் ரெயில் நிலையம் உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அவர்கள் ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பஸ், ஆட்டோ போன்றவற்றில் மற்ற பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆனால் ஜோலார்பேட்டை நகராட்சியில் இதுவரை பஸ் நிலையம் இல்லை. சந்தைக்கோடியூர் பகுதியில் நடைபெற்று வந்த வாரச் சந்தை தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் அகற்றப்பட்டு சாலை ஓரங்களில் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஜோலார்பேட்டையில் உழவர் சந்தை, பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் பஸ் நிலையம் மற்றும் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை அரசுத்துறை அதிகாரிகளுடன் க.தேவராஜி எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story