கைப்பந்து போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு
கைப்பந்து போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு வாலிபால் அசோசியேஷன் மற்றும் விருதுநகர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் இணைந்து நடத்தும் 21 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான யூத் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. மாநில அளவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் விளையாட பெரம்பலூர் மாவட்ட அணிக்கான வீரர்-வீராங்கனைகள் தேர்வு மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில், பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைப்பந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணிக்கு தலா 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணிக்காக விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் பரமேஷ்குமார், செயலாளர் அதியமான், பொருளாளர் செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.