பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை


பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை
x

ஆவின் நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் முதலில் பாட்டில்கள் மூலமே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது.

கரூர்

ஆவின் நிறுவனம்

தற்போது ஆவின் நிறுவனம் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும், நிலைப்படுத்தப்பட்ட பாலை பச்சை நிற பாக்கெட்டிலும், சமன்படுத்தப்பட்ட பாலை நீல நிற பாக்கெட்டிலும், இரு முறை கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலை மெஜந்தா நிற பாக்கெட்டிலும் தரம் பிரித்து, விற்பனை செய்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலமாக 29 லட்சம் லிட்டர் பாலை, ¼, ½, 1 லிட்டர்களில் 63 லட்சம் பாக்கெட்டுகளை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

ஐகோர்ட்டு யோசனை

பால் பாக்கெட்டுகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் திருப்பி ஒப்படைத்தால் ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வழங்கும் திட்டமும் ஆவின் அறிவித்திருந்தது. தற்போது அந்த நடைமுறை மருவிப்போய்விட்டது. இதனால் அன்றாடம் பயன்படுத்தும் 63 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பயன்படுத்திய பிறகு, குப்பை மேட்டுக்கு வந்துவிடுகின்றன. இவ்வாறாக சேரும் பிளாஸ்டிக் கவர்கள் பெரிய சீரழிவை பிற்காலத்தில் தரக்கூடியது.

ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு ஒரு யோசனையை தெரிவித்திருந்தது.

கண்ணாடி பாட்டிலில்...

ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது பற்றி ஆராயும்படி, அரசு தரப்பு வக்கீலுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள். மேலும் முதற்கட்டமாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது ஒரு பகுதியைத் தேர்வு செய்து அங்கு சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பாலை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையிடமும், ஆவின் நிறுவனத்திடமும் கருத்துகளை கேட்பதாக, அரசு தரப்பு வக்கீல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விசாரணை மீண்டும் வருகிற 8-ந்தேதி வர இருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டு கூறியிருக்கும் இந்த யோசனை சாத்தியப்படுமா? என்பது பற்றி பொதுமக்களிடமும், பால் முகவர்கள், வியாபாரியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

வரவேற்பு

வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகரை சேர்ந்த ரேவதி:- தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் பால், தயிர், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் கண்ணாடி பாட்டில்களில் பாலை விற்பனை செய்ய சென்னை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்திருந்தது. எங்களை பொறுத்தவரையில் பால் பாக்கெட்டாக இருந்தாலும் சரி, பாட்டிலாக இருந்தாலும் சரி தரமானதாக இருக்க வேண்டும். தற்போது குளிர்பானங்கள் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பாட்டிலில் பால் விற்பனை செய்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம்.

சுற்றுச்சூழலுக்கு நல்லது

நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார்:- பால், தயிர் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர் மூலம் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் ஆவின் பால் பாட்டில்களில் விற்பனை செய்தால் நல்லது. ஏனென்றால் தற்பொழுது குளிர்பான பாக்கெட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பாட்டிலாக விற்பனைக்கு வந்துவிட்டன. பாட்டில்களாக இருந்தால் வாங்குவோர்களுக்கும் நல்லது, விற்பனை செய்வதற்கு நல்லதாக இருக்கும். அதேபோல் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்தால் அதை வாங்கி செல்பவர்கள் பாக்கெட்டுக்குள் இருக்கும் பாலை எடுத்து விட்டு பிளாஸ்டிக் கவரை தெருவில் தூக்கி வீசிவிடுவார்கள். இதனால் ஆங்காங்கே பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கிடக்கும். தூக்கி வீசப்பட்ட அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மக்காத நிலையில் உள்ளதால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை போல் இதையும் தடை செய்ய வேண்டும். மேலும், பால், தயிரை பாக்கெட்டில் விற்பனை செய்வதை விட பாட்டிலில் விற்பனை செய்வதே சுற்றுச்சூழலுக்கு நல்லது.

தரமாக இருக்க வேண்டும்

முத்தனூர் பகுதியை சேர்ந்த சுதா:- வீட்டிற்கு தேவையான பால், தயிரை அருகே உள்ள ஆவின் பூத் மற்றும் மளிகை கடைகளுக்கு சென்று வாங்கி வருகிறோம். அவர்கள் பால், தயிர் பாக்கெட்டுகளை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். வருங்காலங்களில் பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்போவதாக தெரிகிறது. தரமான பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம்.

எடுத்து செல்வது எளிது

வெள்ளியணையை சேர்ந்த பால் முகவர் அழகுராஜ்:- தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாலை கையாள மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பாக்கெட்டை கிழித்தால் பால் முழுவதையும் பாத்திரத்தில் கொட்டி விட வேண்டும். தேவையான அளவு எடுத்து கொண்டு மீதியை இருப்பு வைக்கலாம் என்பது முடியாத காரியம். ஆனால் பாட்டிலில் அடைத்து பால் விற்கப்படும் போது தேவையான அளவு எடுத்து கொண்டு மீதியை பத்திரமாக பாட்டிலேயே வைக்கலாம். பாட்டிலில் பாலை நுகர்வோர் எடுத்து செல்வது எளிதாக இருக்கும். ஆனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எந்த மாதிரியான பாட்டிலில் பாலை அடைத்து விற்பனை செய்யப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு இந்த முறையை கொண்டு வரலாம்.

பாத்திரங்களில்...

பால் விற்பனையாளர் லட்சுமண பெருமாள்:- நாங்கள் தாந்தோணிமலை கலை கல்லூரிக்கு எதிரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக பால் பூத் வைத்து நடத்தி வருகிறோம். தினமும் காலையில் 4.30 மணிக்கு மணவாடி, கத்தாளப்பட்டி, ஏமூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு சென்று விவசாயிகளிடம் பால்களை எடுத்து வருகிறோம். சுத்தமான பால் என்பது அதிகபட்சமாக 3 மணி நேரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். அதற்கு பின்னால் கெட்டுப்போய்விடும். இதனை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்தால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும். நமது மக்களை பொறுத்தவரை பதப்படுத்திய பால்களை வாங்குவது இல்லை. புதிதாக கிடைக்கக்கூடிய பால்களை தான் அதிகளவு விரும்பி வாங்குகிறார்கள். எங்களிடம் வாங்கும் பொதுமக்கள் அதிகளவில் பாத்திரங்களில் தான் வாங்குகிறார்கள். பாக்கெட் மற்றும் பாட்டில்களில் வாங்குவது கிடையாது.

ஒவ்வாமை ஏற்படும்

தோகைமலை அருகே உள்ள மேலவெளியூரை சேர்ந்த ஜெகநாதன்:- ஆவின் நிறுவனம் முன்பு பாட்டில்கள் மூலமே பால் விற்பனை செய்தது. நாளடைவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. கண்ணாடி பாட்டிலில் பால் வழங்கினால் பொதுமக்களின் உடல் நலத்திற்கு கேடு ஏற்படாது. ஆனால் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பாலை குழந்தைகள் அருந்தினால் ஒவ்வாமை ஏற்படும். மேலும், பல்வேறு நோய்கள் வரக்கூடும். எனவே தமிழக அரசு ஆவின் பாலை மீண்டும் பாட்டில்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செலவு அதிகரிக்கும்

கரூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் நாகராஜன்:- பால் பாக்கெட் பாலித்தீனில் வருவதால் அதனை தவிர்ப்பதற்காக பாட்டில்களில் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாட்டிலில் பால் கொண்டு வர முடியுமா? என தெரியவில்லை. பாட்டிலில் பயன்படுத்தினால் அதிகளவிலான பாட்டில்கள் குவியும். கட்டமைப்பு வசதிகளையும் முழுவதுமாக மாற்ற வேண்டி வரும். செலவு அதிகமாக வரும். பால் கெட்டுப்போக வாய்ப்பில்லை. பாக்கெட், பாட்டில் என இரண்டுமே மறுசுழற்சி செய்ய முடியும்.

பாட்டிலின் தன்மை

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சிவராமபாண்டியன்:- பாட்டிலில் பால் கொண்டு வருவது என்பது சோதனை செய்தபிறகுதான் அனுமதி வழங்குவார்கள். இது பாட்டிலின் தன்மை மற்றும் செயல்முறைகள் பொறுத்தது. பாதாம் மில்க் உள்ளிட்டவைகள் பாட்டிலில் கொடுக்கிறார்கள். அது கெட்டுப்போகாமல் இருப்பதற்கு ஒரு அளவு குறியீடு கொடுக்கிறார்கள். அதுபோல் எந்தளவிற்கு பால் தாங்கும் என்று அளவுகோல் வைத்துதான் முடிவு செய்வார்கள். பாட்டிலில் பால் கொண்டு வருவது இன்னும் இறுதியாகி வரவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story