அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சி
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சியம் அளித்தாா்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமம் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணிஎம்.பி., கோதகுமார், ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தன், கோபிநாத், லோகநாதன் ஆகியோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், லோகநாதன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய 3 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை.
இவ்வழக்கில் ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை, நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர், இந்த வழக்கு சம்பந்தமான கோப்புகளில் தன்னிடம் அப்போது இருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், தனக்கு இந்த முறைகேடு பற்றி ஏதும் தெரியாது எனவும் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார். பின், அவரிடம் அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை செய்தார். தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த இந்த வழக்கு விசாரணை நாளை 7-ந்தேதி நடைபெறும் என நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 10 பேர் சாட்சியம் அளித்ததில் 8 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.