அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் மனுதாக்கல்;தங்களையும் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி முறையீடு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தங்களையும் விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி முறையிட்டுள்ளார்.
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு
தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
9 பேர் பிறழ் சாட்சியம்
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இவ்வழக்கில் 11 பேர் சாட்சியம் அளித்ததில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மனுதாக்கல்
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அரசு வக்கீல் சீனிவாசன் மூலமாக மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அந்த காலக்கட்டத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலவரங்களை கண்டறிந்து செம்மண் குவாரி முறைகேடு சம்பந்தமாக தெளிவான தகவல்களுடன் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாட்சியங்களிடமும் உண்மையான வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 2021-ல் தி.மு.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு விசாரணை வேகம் பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொருவருக்கும் உரிமை
இவ்வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் அவர்கள், பிறழ் சாட்சியமாக மாறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும்.
மேலும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிடவும் இந்திய பிரஜையான அனைவருக்கும் உரிமை உள்ளது. மேலும் இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது. அந்த அடிப்படையில்தான், நான் இம்மனுவை தாக்கல் செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திடீரென மனுதாக்கல் செய்துள்ளது இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.