ரூ.172 கோடியில் செம்மொழிப்பூங்கா


ரூ.172 கோடியில் செம்மொழிப்பூங்கா
x
தினத்தந்தி 7 Sept 2023 1:00 AM IST (Updated: 7 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

ரூ.172 கோடியில் செம்மொழிப்பூங்கா

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் ரூ.172 கோடியில் அமைக்கப்பட உள்ள செம்மொழிப்பூங்கா பணிகள் விரைவில்தொடங்க உள்ளது. தமிழ்நாடுநகர்ப்புற நிதி உள்கட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார்.

செம்மொழிப்பூங்கா

கோவை மத்திய சிறை அமைந்துள்ள பகுதியில் ரூ.172 கோடியில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. கோவை மத்திய சிறை காரமடை அருகே உள்ள பிளிச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. செம்மொழிப்பூங்காவில் மூலிகை பண்ணை, 10 ஆயிரம் செடிகள், மரங்கள் கொண்ட தோட்டம், மலர் செடிகள், திறந்தவெளி தியேட்டர், உணவகம், பாரம்பரிய பூங்கா உள்ளிட்ட பல்வேறு பசுமை சூழ்ந்த பகுதிகள், மின்னொளி நீருற்றுகள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக அமைக்கப்பட உள்ள செம்மொழிப்பூங்காவுக்கு அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலாண்மை இயக்குனர் ஆய்வு

இந்தநிலையில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி உள்கட்டமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் எஸ்.விஜயகுமார் நேற்று பூங்கா அமைய உள்ள இடத்தைநேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அதிகாரிகள் ராஜேந்திரன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செம்மொழிப்பூங்காவுக்கான ஆரம்ப கட்ட பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கருத்தரங்கு கூடம்

முதல்கட்டமாக 45 ஏக்கர் நிலத்தில் செம்மொழிப்பூங்காவுக்கான மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ளப்படும். 3 ஏக்கரில் கருத்தரங்கு கூடங்கள், கட்டப்படும். பூங்காவில் மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதி செய்யப்படும். செம்மொழிப்பூங்காவுக்கான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) இன்னும் ஒருவாரத்துக்குள் இறுதி செய்யப்படும்.

ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டதும் பூங்கா அமைக்கும்பணிகள் விரைவில்தொடங்கும். பூங்கா அமைக்கும் பணி தொடங்கிய 18 மாதங்களில் முடிக்கப்படும். தற்போதைய விரிவான திட்ட அறிக்கைபடி 38 ஏக்கர் பரப்பளவில் மேம்படுத்த உள்ளோம்.

இந்த பூங்காவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறை டி.ஐ.ஜி., கண்காணிப்பாளர் ஆகியோரின் கட்டிடங்கள் பராமரிக்கப்படும். அதனை நாங்கள் இடிக்க திட்டமிடவில்லை. அந்த கட்டிடங்களை பயன்படுத்திக்கொள்வோம். பிளிச்சிக்கு சிறை முழுவதுமாக இடமாற்றம் செய்தபின், சிறைத்துறையிடம் இருந்து 75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளோம்.

வாலாங்குளம் தண்ணீர்

செம்மொழிப்பூங்காவுக்கு தேவையான தண்ணீர் வாலாங்குளத்தில் இருந்து குழாய் மூலம் எடுத்து பயன்படுத்தப்படும். இதற்காக சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும். வாலாங்குளத்து தண்ணீரை சுத்திகரித்து பசுமையான செடிகளை பராமரிக்க பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story