செஞ்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

செஞ்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் மாவட்ட பா ஜ க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
செஞ்சி
விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில அலுவலக செயலாளர் சந்திரன் மற்றும் சிறுபான்மை அணி தலைவர் டெய்சி சரண் ஆகியார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் செஞ்சி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பாரத பிரதமரின் மக்கள் நல திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிப்பது, விழுப்புரம் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும், செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தனியாருக்கு சொந்தமான 527 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு வக்பு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறாமல் பதிவு செய்யக்கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், தவறினால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாண்டியன், சத்ய நாராயணன், ராமஜெயக்குமார், பொருளாளர் சுகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சிவ தியாகராஜன், மாவட்ட முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், விநாயகம், செஞ்சி தொழிலதிபர் கோபிநாத் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி நகர தலைவர் தங்கராமு நன்றி கூறினார்.






