ஆண்டாள் கோவிலுக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை அனுப்பி வைப்பு


ஆண்டாள் கோவிலுக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை அனுப்பி வைப்பு
x

ஆடிப்பூரத்தையொட்டி கள்ளழகர் கோவிலில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் அனுப்பப்பட்டன.

மதுரை

அழகர்கோவில்,

ஆடிப்பூரத்தையொட்டி கள்ளழகர் கோவிலில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் அனுப்பப்பட்டன.

ஆண்டாள் கோவில் தேரோட்டம்

மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் பவனி வரும் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் நேற்று காலையில் அழகர்கோவிலில் இருந்து சுமார் 100 கி.மீ.தூரம் வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இக்கோவிலில் இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்வது பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவது வழக்கம்.

அதன்படி திருத்தேரில் பவனி வரும் ஆண்டாள் நாச்சியாருக்கு எத்தனையோ புதிய பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வரப்பெற்ற போதிலும் கள்ளழகர் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் அழகர் அணிந்த பட்டு வஸ்திரம், மாலையை மட்டும் ஆண்டாளுக்கு அணிவிப்பதே இன்றளவும் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சீர்வரிசை பொருட்கள்

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தேரோட்ட விழாவிற்காக அழகர்கோவிலில் இருந்து பெருமாள் உடுத்தி கலைந்த பட்டு, வஸ்திரம், பூமாலை, முக்கனிகள் உள்ளிட்ட பழ வகைகள், துளசி மாலை, அழகருக்கு பிடித்த தோசை, உலர் பழங்கள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளை பக்தர்கள் முன்னிலையில் பட்டர்களின் மந்திரங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை நோக்கி நேற்று மதியம் கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக மேள தாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரகளுடன், சுந்தரவல்லி யானை முன்னே செல்ல இந்த சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவிலில் இருந்து வேன் மூலம் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், அருள் செல்வம், பிரதீபா, உதவி பொறியாளர் கிருஷ்ணன், பேஷ்கார் முருகன், உதவி பேஷ்கார் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story