தினமும் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைப்பு


தினமும் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 30 July 2023 9:30 PM GMT (Updated: 30 July 2023 9:30 PM GMT)

ஆனைமலையில் இருந்து வெளியிடங்களுக்கு தினமும் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுவதாக சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் இருந்து வெளியிடங்களுக்கு தினமும் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுவதாக சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி இளநீர்

கோவை மாவட்டம் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 3 தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கர் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் பொள்ளாச்சி இளநீருக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தநிலையில் பொள்ளாச்சியில் இருந்து தினசரி மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், மராட்டியம், அசாம், அரியானா, உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கனரக வாகனங்களில் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஆனைமலையில் இருந்து 5 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்பட்டது.

நோய் தாக்குதல்

ஆனால் இந்த ஆண்டு 2 மாத்திற்கு முன்பு 1½ லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கேரள வேர் வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல், மழை இல்லாதது போன்ற காரணங்களால் இளநீர் விளைச்சல் குறைந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் இளநீர் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது 29 ரூபாய்க்கு தோட்டங்களில் இளநீர் வெட்டப்படுகிறது.

2 லட்சம் இளநீர்

இதுகுறித்து ஆனைமலை இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை காலங்களில் தினசரி 5 லட்சம் இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மரங்களில் நோய் தாக்கி விளைச்சல் குறைந்ததன் காரணமாக வெறும் 1½ லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது. தற்போதுதான் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது ஒரு இளநீர் விலை 29 ரூபாய்க்கும், 1 டன் விலை 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது என்றார்.


Related Tags :
Next Story