சேலத்தில் பரபரப்பு:திருமணிமுத்தாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை முயற்சி


சேலத்தில் பரபரப்பு:திருமணிமுத்தாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை முயற்சி
x

சேலத்தில் திருமணிமுத்தாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம்

ஆதரவற்ற மூதாட்டி

சேலம் மாநகர பகுதியில் ஆதரவற்ற முதியோர் மற்றும் வீட்டை விட்டு வெளியேறி வந்த பலர் சாலையோரம், பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தங்கி உள்ளனர். அவர்கள் அன்றாட உணவு தேவைக்காக யாசகம் பெறுவதும், கோவில்களில் சென்று அன்னதானம் பெற்றும் உணவு உண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இதேபோல் பிரேமா (வயது 70) என்ற மூதாட்டி ஆதரவற்ற நிலையில் திருமணிமுத்தாறு ஆற்றங்கரை ஓரத்தில் காய்கறி உள்ள மார்க்கெட் பகுதியில் சில நாட்களாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடையாபட்டி, அம்மாபேட்டையில் உள்ள மிலிட்டரி ரோடு ஆகிய பகுதிகளில் சில நாட்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயற்சி

இந்த நிலையில் பிரேமா வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நேற்று முன்தினம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு ஆட்கொல்லி பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் திருமணிமுத்தாற்றில் பக்கவாட்டு சுவரில் உருண்டு கீழே விழுந்து உள்ளார். மேலும் அங்கு சிறிதளவே தண்ணீர் உள்ளது.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வாழ பிடிக்காமல் மூதாட்டி திருமணிமுத்தாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story