வன உரிமைச் சட்டம் குறித்து வன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு
வன உரிமைச் சட்டம் குறித்து வன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு
ஊட்டி
நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வன உரிமைச் சட்டம்- 2006 குறித்த விழிப்புணர்வு கூட்டம் வனச்சரகர்கள் மற்றும் வனவர்களுக்கு ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லிங்கம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், வன உரிமைச் சட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கான நில உரிமை பெற இயலும். பழங்குடியின மக்கள் கிராம சபை மூலமாக தங்கள் நிலத்தின் மீதான உரிமையை உறுதி செய்ய முடியும். வனத்துறை பணியாளர்களுக்கு ஏதேனும் சட்ட உதவி தேவை எனில் தயங்காமல் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என்றார். இதைத்தொடர்ந்து வன உரிமைச் சட்டம் குறித்தும், நில உரிமை, சமூக உரிமை பெற, ஒவ்வொரு கிராம பகுதியிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தி, வனஉரிமைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்களில் தீர்மானங்கள் நிறைவேற்றி, அதன்படி நில அளவை செய்யப்பட்டு, வரைபடங்களும் தயார் செய்து கோட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படுவதின் முக்கியத்துவம் குறித்தும் வனச்சரகர்களுக்கும், வனவர்களுக்கும் விளக்கப்பட்டது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் துணை பாதுகாப்பு ஆலோசகர் குணசேகரன், ஆர்.டி.ஓ.க்கள் பூஷ்ணகுமார், முகமது குதரத்துல்லா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் இருந்தனர்.