செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை - அமலாக்கத்துறை வாதம்
செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதிட்டது.
சென்னை,
சென்னை, அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். அதில் "செந்தில்பாலாஜியின் கைதை சட்டவிரோதம் எனக்கூற முடியாது. நீதிமன்ற காவல் ஆணை பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கலானதால் கைது சட்டவிரோதம் இல்லை. நீதிமன்ற காவலில் வைக்க கோரிய மனு 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டப்படி ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யலாம். கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. கைதுக்கு பின்னர் காரணத்தை கூறலாம்.
நீதிமன்றக் காவலில் வைக்க ஆஜர்படுத்தும்போது, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரலாம். நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. நீதிமன்ற காவல் உத்தரவை எதிர்த்து ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது.
உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருக்கிறார்; அமலாக்கத்துறை காவலில் இல்லை. செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி தற்போது கோர முடியாது. கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன என வாதிட்டு வருகிறார்.