செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனு மீதான உத்தரவு நாளைக்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறையின் மனு மீதான உத்தரவை நாளைக்கு தள்ளிவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாணை 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவு சார்பில் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் காவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.
இந்த விசாரணையின் இரு தரப்பு வாதங்களும் தற்போது நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறையின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி சற்று நேரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இதையடுத்து தற்போது செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை நாளைக்கு தள்ளிவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.