செந்தில்பாலாஜி நலமுடன் உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஆஸ்பத்திரியில் செந்தில்பாலாஜி நலமுடன் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை, சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 142-வது வார்டு கவுன்சிலர் எம்.கிருஷ்ணமூர்த்தியின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன கணினி ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் எம்.ஸ்ரீதரன் மற்றும் மண்டல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி, கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித்தரத்தோடு, கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேயராக இருந்தபோது கணினி கல்வியை மேம்படுத்தியதன் விளைவாக தேர்ச்சி விகிதம் அதிகரித்தது. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்களை போட்டி, போட்டுக்கொண்டு சேர்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி 86 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நலமுடன் உள்ளார்
இதேபோல, இந்த ஆண்டு இந்த பள்ளியை சேர்ந்த ஒரு மாணவிக்கு மருத்துவம் பயில 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில், மாந்தோப்பு சென்னை பள்ளியானது சைதாப்பேட்டைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சென்னைக்கும் பெருமை சேர்க்கும் பள்ளியாக உள்ளது. இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96 சதவீதமும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 94 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் கவனிக்கப்படாமல் இருந்த பழைய கட்டிடங்களை இப்போது கவனித்து புதிய கட்டிடங்கள் கட்டி வருகிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்றுமுன்தினம்தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அவர் நன்றாக இருக்கிறார்.
புதுக்கோட்டையில் அடுத்த மாதம் பல் மருத்துவ கல்லூரியை திறந்துவைக்க உள்ளோம். 6 நர்சிங் பயிற்சி கல்லூரிகள் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்த நிலையில் புதிதாக 11 நர்சுகள் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கி உள்ளோம்.
சிறப்பு முகாம்
மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக ஓராண்டு முழுவதும் நடத்த வேண்டும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில், முதல்-அமைச்சர் அடுத்த மாதம் மதுரையில் மிகப்பெரிய நூலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் கலைஞர் நூற்றாண்டிற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) 100 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னையில் 10 இடங்களில் நடைபெற உள்ளது. கோடம்பாக்கம் மண்டலம், புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள மருத்துவ முகாமை நாளை காலை 9 மணிக்கு நான் தொடங்கி வைக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.