செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய மனு நாளை ஒத்திவைப்பு


செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய மனு நாளை ஒத்திவைப்பு
x

செந்தில்பாலாஜி நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்த நிலையில், நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. பண பரிமாற்ற வழக்கில் தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

செந்தில்பாலாஜியின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்தநிலையில், இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன் இன்று காலை விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வருவதற்காக விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது கோபமடைந்த நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள் என்று அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கில் அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநில காவல்துறை ஒரு நாளைக்கு 120 ஜாமீன் வழக்கில் பதில் தாக்கல் செய்யும் நிலையில், ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கூறும் காரணம் ஏற்கும் படியில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கில் இரு தரப்பினரும் வாதங்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி அல்லி, நாளைக்கு ஒத்தி வைத்தார்.


Next Story