நொய்யல் பகுதிகளில் தொடர் திருட்டு


நொய்யல் பகுதிகளில் தொடர் திருட்டு
x

நொய்யல் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருவதால் வெளி மாவட்டத்தினரை கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

இருசக்கர வாகனங்களில் வலம்

கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், குட்டக்கடை, காகிதபுரம், வேலாயுதம்பாளையம், புகழூர், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இப்பகுதியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாலிபர்கள், வெளி மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

நகைகள் பறிப்பு

அப்போது பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வீடுகளில் தனி நபர்கள் இருப்பது, வெளியூர்களுக்கு சென்றவர் களின் வீடுகள் போன்றவற்றை கண்காணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.

அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விடுகின்றனர். இதனால் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர்.

கோரிக்கை

இதன் காரணமாக போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும்.

எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்த வேண்டும். இதனால் திருட்டு குற்றங்களை தடுக்க முடியும். எனவே போலீசார் வாகன சோதனை நடத்தி திருட்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story