திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுது - பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் அவதி


திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுது - பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் அவதி
x

திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பழுது அடைந்தது. இதனால் பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீட்டுமனை வாங்கியதற்கான பத்திரப்பதிவு, பெயர் மாற்றம், வில்லங்கம் பார்ப்பது, திருமணம் பதிவு செய்வது, வங்கி கடன் ஒப்பந்தம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்வது மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறுவது வழக்கம்.

செப்டம்பர் மாதத்தின் முதல் நாளான நேற்று வியாழக்கிழமை சுப முகூர்த்த தினம் என்பதால் ஆன்லைனில் முன்கூட்டியவே பதிவு செய்த 200-க்கும் மேற்பட்டோர் காலை முதல் திருவள்ளூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் குவிய தொடங்கினார்.

நிலத்தை வாங்கியவர்கள், விற்றவர்கள், அதற்கு சாட்சி கையெழுத்து போடுபவர்கள் என கூட்டம் அலைமோதியது.

ஆனால் பத்திரப்பதிவு அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்யபடுவதால் பதிவு செய்ய வந்தவர்களின் புகைப்படம் எடுக்க சர்வரை இயக்கியுள்ளனர். ஒரு சிலருக்கு மட்டுமே பத்திரப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சர்வர் பழுதால் திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் காத்து கிடந்தனர்.

இது குறித்து சார் பதிவாளரிடம் விசாரித்த போது:-

தமிழகம் முழுவதும் டி.சி.எஸ். எனப்படும் தனியார் வசம் இந்த ஆன்லைன் சேவைக்கான பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், மாநிலம் முழுவதுமுள்ள 538 சார் பதிவாளர் அலுவலகத்தின் மூலம் பத்திரப் பதிவு செய்யப்படுவதாகவும் இதனால் சர்வர் வேகம் குறைவாகவும், ஒரு சில நேரங்களில் வேலை செய்யாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது கூடியவிரைவில் இணைய தள சேவை சரியாகி விடும் என்றும் தற்போது மந்தமாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

மாலை 6 மணி நிலவரப்படி 200 பேரில் 20 நபர்களுக்கு மட்டுமே பத்திரப்பதிவு செய்வதற்கான பணிகள் நிறைவு பெற்றதாகவும் சார் பதிவாளர் அலுவலகத்தின் சார்பில் தெரிவித்தனர். இந்த 200 பேருக்கும் பத்திரப்பதிவு செய்ய நள்ளிரவு வரை ஆகும் என்றும், முடியாத பட்சத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும் சார் பதிவாளர் அலுலவகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story