தொடர் மழையால் எள், பருத்தி பயிர்கள் நாசம்


தொடர் மழையால் எள், பருத்தி பயிர்கள் நாசம்
x

தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் எள், பருத்தி பயிர்கள் நாசமானது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

தொடர் மழை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சம்பா நெல் சாகுபடி நிறைவடைந்ததும் மீண்டும் குருவை நடவு செய்வது வழக்கம். கடந்த ஓரிரு ஆண்டுகளாக குருவை பாசனப்பரப்பு குறைக்க அதிகாரிகள் விவசாயிகளுக்கு வாய்மொழி அறிவுரை வழங்கி பருத்தி, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களை நஞ்சை வயல்களில் பயிரிட கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து குருவை நடவுக்கு பதிலாக அப்பகுதி விவசாயிகள் எள், பருத்தி ஆகியவற்றை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குருவை நெல் சாகுபடி செய்திருந்த வயல்களில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் எள், பருத்தி ஆகிய பயிர்கள் கோடை காலத்து மழைக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.

வேர் அழுகல் நோய்

மழை பெய்து முடிந்த உடனேயே எள் பயிர் அழிந்து போனது. பருத்தி வயல்களில் முதல் கட்ட அறுவடைக்கு தயாராக இருந்த பருத்திச் செடிகளில் பருத்திப்பூ வெடித்து பஞ்சு பிரியும் பருவத்தில் மழை பெய்தது. எனவே வெடித்த பருத்தி பஞ்சு பிரியாமல் வீணாகிப்போனது. அதுபோல் பருத்தி தாமதமாக நடவு செய்யப்பட்ட வயல்களில் பருத்தி செடிகள் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு முற்றிலும் அழிந்துவிட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- நெற்பயிருக்கு பருவ கால காப்பீடு பதிவு செய்வது போல் எள், பருத்தி ஆகியவற்றுக்கு காப்பீடு செய்ய வழி காட்ட வேண்டும். குருவை நெல் சாகுபடி பரப்பை குறைக்க அதிகாரிகள் அறிவுறுத்தியதாலும், குருவை நெல் கொள்முதல் செய்ய அரசு தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்காததாலும் வேறு வழியின்றி மாற்றுப் பயிர் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நிவாரணம் வழங்க கோரிக்கை

ஆனால் திடீரென பெய்த மழை காரணமாக எங்களது கடந்த 4 மாத கால உழைப்பு வீணாகி விட்டது. நெல், எள் ஆகியவற்றை பயிரிடுவதற்கும், பராமரிப்புக்கு ஆகும் செலவை காட்டிலும் பருத்தி பயிரிட்டு பராமரிப்பதற்கான செலவு மிகவும் அதிகம். பருத்தி விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். ஆனால் இப்போது பெய்த தொடர் மழையால் சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி முற்றிலும் வீணாகிவிட்டது. மேலும் இதற்கு செலவு செய்த அனைத்து பணமும் வீணாகிவிட்டது. எனவே பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து அதிகாரிகள் அரசிடமிருந்து நிவாரணம் பெற்று தர வேண்டும்.

பல்வேறு பகுதிகளில் பருத்தி வயல்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் நிவாரண உதவி பற்றி இதுவரை விவசாயிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை பருத்திக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விடும். இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.


Next Story