4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
பனப்பாக்கம் அருகே 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம் கிராமத்தில் உள்ள கீழபுலம் பகுதியில் வசித்து வருபவர் யுவராஜ் (வயது 56). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அதன் அருகில் அவரது உறவினர்களின் 3 மோட்டார் சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து கிடந்தன. மர்ம நபர்கள் யாரோ மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார் எரிந்து கிடந்த மோட்டார்சைக்கிள்களை பார்வையிட்டனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.