தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,198 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,198 வழக்குகளுக்கு தீர்வு
x

மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,198 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கடலூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும்(பொறுப்பு), எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதியுமான உத்தமராஜ் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் -1 நீதிபதி ஆனந்தன், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம்-2 நீதிபதி பிரகாஷ், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரபாகர், கூடுதல் சார்பு நீதிபதி-II அன்வர் சதாத், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவணாம்ச வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

ரூ.10¾ கோடி வசூல்

இதில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-I வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-III ரகோத்தமன், மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் பாலகிருஷ்ணன், லாயர்ஸ் அசோசியேஷன் செயலாளர் சிவசிதம்பரம் மற்றும் வக்கீல்கள், போலீஸ் நிலைய அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்ட தாலுகா நீதிமன்றங்களான பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 3,885 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 1,198 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.10 கோடியே 94 லட்சத்து 28 ஆயிரத்து 249 வசூலிக்கப்பட்டது.

விருத்தாசலம்

விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பிரபா சந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சி.ஆர்.கவுதமன் முன்னிலை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ் ஆகியோர் 2 அமர்வாக அமர்ந்து மோட்டார் வாகன விபத்து காப்பீடு வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், மற்றும் போலீஸ் நிலைய அபராத வழக்குகள் உள்ளிட்ட 107 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 72 லட்சத்து 64 ஆயிரத்து, 415-க்கு தீர்வு ஏற்படுத்தினார்கள்.


Next Story