தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,443 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,443 வழக்குகளுக்கு தீர்வு
திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,443 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 96 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
1,443 மனுக்களுக்கு தீர்வு
திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார். இதில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட குற்றவியல் நடுவர் பாலமுருகன், சார்பு நீதிபதி சரண்யா, திருவாரூர் குற்றவியல் நடுவர் ரெகுபதி ராஜா, கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை விசாரித்தனர். முகாமில் சிவில் வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், திருமண விவாகரத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் வங்கிசாரா வாரா கடன் வழக்குகள் உள்ளிட்ட 2,636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 1,443 மனுக்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 835 வசூல் செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
இதேபோல் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர்- மாவட்ட உரிமையியல் நீதிபதி (பொறுப்பு) நீதித்துறை நடுவர் அருண் முன்னிலையில் நடந்தது. இதில் வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல் பாலமுரளி, அரசு வக்கீல் பாஸ்கர், வக்கீல்கள் சங்க தலைவர் செந்தில்குமார், செயலர் ஹரிபாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 6 காசோலை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து குற்றவியல் வழக்குகள் 347 முடிக்கப்பட்டு அபராதமாக ரூ.4லட்சத்து 19 ஆயிரத்து 350 வசூலிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.