மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நாமக்கல்

மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் சுந்தரையா, மோகனபிரியா, கிருஷ்ணன், பிரவீனா மற்றும் வட்ட அளவிலான சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. முதன்மை குற்றவியல் நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

இதில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகான வழிவகை செய்யப்பட்டது.

1,481 வழக்குகளுக்கு தீர்வு

குறிப்பாக நாமக்கல் லைன்தெருவை சேர்ந்தவர் வாஹித் பாஷா (வயது23). கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி வீசாணம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் படுகாயம் அடைந்த வாஹித் பாஷாவுக்கு ரூ.16 லட்சத்து 44 ஆயிரம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் முன்வந்தது. இதையடுத்து சமரசம் ஏற்பட்டு, இழப்பீடு பெறுவதற்கான ஆணையை மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் வழங்கினார்.

இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 2,970 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,481 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.11 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்து 120 செலுத்தி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story