பொள்ளாச்சி வனப்பகுதியில் கடும் வறட்சி

பொள்ளாச்சி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தீப்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தீப்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
வனத்தில் வறட்சி
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகங்களில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, கரடி, புலி, சிங்கவால் குரங்கு மற்றும் அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பருவமழை பொய்த்து போனதால், பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து விட்டன.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து விட்டது. மேலும் எங்கு பார்த்தாலும் பசுமையாக காணப்பட்ட மரங்களின் இலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சி அளிக்கின்றன. வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க தீத்தடுப்பு கோடுகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். நீரோடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதாலும், வறட்சியின் காரணமாக போதிய உணவு கிடைக்காததாலும் வனவிலங்குகள் தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி படையெடுக்கின்றன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்கப்படும்
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரக பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே, வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க வனப்பகுதிகளில் ஆங்காங்கே தொட்டி அமைத்து, அதில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து வரக்கூடாது. வனப்பகுதிகளில் சமையல் செய்து சாப்பிடக்கூடாது. வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க சுற்றுலா பயணிகள் முழுஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்போது வனவிலங்குகள் தண்ணீர் தேடி பொள்ளாச்சி வனச்சரகத்தில் உள்ள ஆழியாறு அணைக்கு வருகின்றன. எனவே, வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை மிகவும் கவனமுடன் இயக்க வேண்டும். வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






