வாகன ஓட்டிகள் மீது கழிவுகள் விழுவதால் கடும் அவதி
தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது கழிவுகள் கீழே விழுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு தடுப்புகள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை,
தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது கழிவுகள் கீழே விழுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு தடுப்புகள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சுரங்கப்பாதை
கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சுரங்கப்பாதை செல்கிறது. இதில் இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் தண்டவாளம் குறுக்கிடுகிறது. இதற்காக அங்கு ராட்சத இரும்பினால் ஆன பாலம் அமைத்து அதில் தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு ரெயில் செல்லும்போது அதில் இருந்து கழிவுகள் கீழே விழுந்தன. இதனால் சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனங்களின் மீது அந்த கழிவுகள் விழுந்ததால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டன.
தகடுகள் அகற்றம்
இதனால் அவை வாகன ஓட்டிகள் மீது விழாமல் அந்த தகடுகள் மீது விழுந்ததால், வாகன ஓட்டிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சென்று வந்தனர். இந்த நிலையில் இங்குள்ள தண்டவாளப்பகுதியில் உள்ள இரும்பு பாலம் மாற்றப்பட்டது. இதற்காக தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இரும்பு தகடுகளும் எடுக்கப்பட்டன. ஆனால் இரும்பு பாலத்தை மாற்றிய பின்னர் அதன் கீழ்ப்பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கவில்லை.
இதனால் ரெயில் செல்லும்போது அதில் இருந்து விழும் கழிவுகள் கீழே சுரங்கப்பாதையில் விழுந்து வருகிறது. இதனால் இந்த பாதையில் ரெயில் செல்லம்போது தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் இருபுறத்திலும் வாகன ஓட்டிகள் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
வாகன ஓட்டிகள் அவதி
மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் தண்டவாளத்தின் கீழ் உள்ள தகடுகள் இல்லாததால் ரெயில் செல்லும்போது கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கீழே விழுகிறது. குறிப்பாக கழிவறையில் ஊற்றும் தண்ணீர் கீழே வழிந்தபடி செல்வதால், அது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது.
இதனால் அந்த வழியாக ரெயில் செல்லும்போது அங்கு வாகன ஓட்டிகள் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் மீண்டும் தடுப்புகள் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.