சென்னையில் மழைநீருடன் கலந்த கழிவுநீர் - வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி


சென்னையில் மழைநீருடன் கலந்த கழிவுநீர் - வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மழைநீர் தேங்குவதும், பின்னர் வடிவதுமாக காட்சி அளித்துக் கொண்டே உள்ளது.

இந்த நிலையில் இடி மின்னலுடன் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, மாங்காடு அதன் சுற்று வாட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடிங்கியுள்ளது.

மாங்காடு ஓம்சக்தி நகர், சக்கரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குன்றத்தூர்-மாங்காடு சாலை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஓம் சக்தி நகர் பகுதியில் கீழ்தளத்தில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களும் நாசமாகி இருக்கிறது. இதனால் மக்கள் தங்களது வீட்டில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரூம் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் இருப்பதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் உடனடியாக மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலுயிறுத்தியுள்ளனர்.

சென்னை போரூரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து செல்வதால் மக்களின் அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளது.

இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. போரூர் முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை தீயணைப்பு வீரர்கள் படகுகள் மூலமாக மீட்டு வெளியேற்றி வருகிறார்கள்.


Next Story