மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம்


மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் உதவித்தொகை, அடையாள அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 229 மனுக்களை கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் வழங்கினர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில்,

மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை, தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீதம் பஸ் பயண சலுகைகள், சுய தொழில் தொடங்க வங்கி கடன், சிறப்பு சக்கர நாற்காலி, முடநீக்கு உபகரணங்கள், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

எனவே இதனை மாற்றுத்திறனாளிகள் பெற்று பயன்பெறலாம். இதேபோல் மாவட்டத்தில் நீர் நிலைகள் அல்லாத இடங்கள் மற்றும் தரிசு, நத்தம், புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்படும் என்றார். தொடர்ந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 8ஆயிரம் மதிப்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story