சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
x

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அரியலூர்

பாலியல் தொந்தரவு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பூவானிப்பட்டு கிராமம் அணிக்குதிச்சான் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது 42). தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது சிறுமியிடம் வா, அய்யனார் ஏரிக்கு குளிக்க போகலாம் என ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு முந்திரிதோப்பில் வைத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அழுதுகொண்டே வந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், அந்தோணிராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து அந்தோணிராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story