தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கோவையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி, விளையாட்டு ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கோவையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி, விளையாட்டு ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தனியார் பள்ளி
கோவை மாநகர பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் நிர்வாக அதிகாரியாக கணபதியை சேர்ந்த விஜயகுமார், விளையாட்டு ஆசிரியராக வெள்ளியங்காட்டை சேர்ந்த முரளிதரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பெற்றோர் புகார்
இதையடுத்து தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றோர் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, கோவை மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவரது உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மதியழகன், கல்பனா ஸ்ரீதர் மற்றும் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
போக்சோ வழக்கு
அதாவது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பலருக்கும் பள்ளியின் நிர்வாக அதிகாரி விஜயகுமார் மற்றும் விளையாட்டு ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இதுபற்றி வெளியே கூறினால், உங்களை பற்றி பெற்றோரிடம் தவறாக கூறி விடுவோம் என்று மாணவிகளை மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து பள்ளியின் நிர்வாக அதிகாரி விஜயகுமார் மற்றும் விளையாட்டு ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.