குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் கைது


குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் கைது
x

குளித்தலையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் ஆகியோர் கைது

கரூர்

பாலியல் தொந்தரவு

கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை அக்கல்லூரியின் முதல்வரும், அ.தி.மு.க. பிரமுகருமான குளித்தலை காவிரி நகரை சேர்ந்த வக்கீல் செந்தில்குமார் பலமுறை பாலியல் தொந்தரவு செய்து, அந்த மாணவியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.அதற்கு அக்கல்லூரியின் விடுதி காப்பாளராக பணிபுரியும் அமுதவள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சமையல் மற்றும் பராமரிப்புபணி செய்து வந்த மாணவியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

வலைவீச்சு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமார், அமுதவள்ளி உள்பட 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 3 பேரை தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரான அந்த தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டு சமையலராக இருந்த அக்கல்லூரி மாணவியை அவரது சொந்த ஊரிலேயே குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர்.

கைது

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவள்ளி ஆகிய 2 பேரையும் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அமுதவள்ளி ஆகிய 2 பேரும் சென்னை மேல்மருவத்தூர் பகுதியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் பேரில் தனிப்படை போலீசார் மேல்மருவத்தூர் சென்று செந்தில்குமார், அமுதவள்ளி ஆகியோரை குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் ‌போலீசார் செந்தில்குமார் மற்றும் அமுதவள்ளி ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story