இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் போக்சோவில் கைது


இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; மாணவர் போக்சோவில் கைது
x

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரவாயல்,

மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அமைந்தகரையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். கொரோனா சமயத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் வீடுகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தன. இதனால் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்கு வசதியாக விலையுயர்ந்த செல்போன் ஒன்றை மாணவிக்கு பெற்றோர் வாங்கி தந்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் சிறுமி ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. இதில் இன்ஸ்டாகிராம் மூலம் பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (வயது 19), என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

போக்சோவில் கைது

இந்த நிலையில் மாணவியை காதலிப்பதாக கூறியதையடுத்து, அவர் தனியாக வீட்டில் இருந்த போது வீட்டிற்கு வந்த ஜார்ஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் அதை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி அவர் அடிக்கடி பணம் வாங்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரித்தனர். இதையடுத்து கல்லூரி மாணவர் ஜார்ஜ் மீது போக்சோ சட்டத்தில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story