சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் உயிரிழப்பு


சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் உயிரிழப்பு
x

சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

சென்னை,

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரும், தொழில் அதிபருமானவர் சேகர் ரெட்டி. இவரது மகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா மகன் சந்திரமவுலிக்கும் (வயது 27) சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவருக்கும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 26-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் நடத்தி வைப்பதாகவும் இருந்தது.

இதையொட்டி, கடந்த சில நாட்களாக சந்திரமவுலி தனது திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து வந்தார்.

இதனிடையே, சந்திரமவுலிக்கு கடந்த 18-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சந்திரமவுலிக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருந்து வந்தது.

இந்நிலையில், மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன் சந்திரமவுலி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று காலை 8.20 மணியளவில் சந்திரமவுலி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேகர் ரெட்டியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா மகன் சந்திரமவுலி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சேகர் ரெட்டியின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story