சொகுசு கப்பல் பயணத்தை தொடங்க வேண்டும்


சொகுசு கப்பல் பயணத்தை தொடங்க வேண்டும்
x

ராமேசுவரம், கன்னியாகுமரி சுற்றுலாதலங்களுக்கு சொகுசு கப்பல் பயணத்தை தொடங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமேசுவரம், கன்னியாகுமரி சுற்றுலாதலங்களுக்கு சொகுசு கப்பல் பயணத்தை தொடங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

மனு

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு சொகுசு கப்பல் பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால் பாண்டிச்சேரி அரசு அனுமதி அளிக்க வில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

சொகுசு கப்பல் பயணத்தை தமிழ்நாட்டிற்கு உட்பட்ட தென் மாவட்ட சுற்றுலாத் தலங்களான ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தொடங்க வேண்டும். தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சொகுசு கப்பல் பயணத்தை தொடங்குவதன் மூலம் ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட தென் மாவட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை மேம்படுவதற்கு பயன் உள்ளதாக அமையும்.

மன்னார் வளைகுடா

தமிழகத்தின் தெற்கு கடலோர வளைகுடாவில் தொடங்கி, இலங்கையின் தலைமன்னார் பகுதி வரையில் விரிந்துள்ள கடற்பகுதிக்கு மன்னார் வளைகுடா என்று பெயர். இந்த வளைகுடாவில் அமைந்து உள்ள, ராமநாதபுரம்- தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் 21 தீவுகள் இருக்கின்றன. 0.25 எக்டேர் முதல் 125 எக்டேர் பரப்பளவில் இருக்கும் இந்தத் தீவுகளைச் சுற்றி, 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இவை 94.3 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்த ஒரு பெரிய பவளப்பாறை தொகுப்பை ஏற்படுத்து கின்றன.

இந்தப் பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகமாக இருப்பதால், மீன் உள்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் இங்கு வசிக்கின்றன. இந்தியாவில் இருக்கும் 2,200 துடுப்பு வகை மீன்களில், 510 மீன்கள் இங்கு இருக்கின்றன. மீன்கள் மட்டுமின்றி, 79 கணுக்காலிகள், 108 புரையுடலிகள் , 260 மெல்லுடலிகள், 100 முட்தோலிகள், 147 கடற்பாசி வகைகள், 160 கடற்பறவை இனங்கள், டால்பின்கள் மற்றும் ஏராளமான அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் இவற்றை கண்டுமகிழ வாய்ப்பாக அமையும்.

மகிழ்வார்கள்

தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா உள்ள இந்த பகுதியில் சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கினால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரலாம். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தில் கடல்வாழ் உயிரினங்களை கண்டு மகிழ்வார்கள். சுற்றுலா துறைக்கும் அதிக வருமானம் கிடைக்கும். எனவே இதுகுறித்து பரிசீலித்து ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்னையில் இருந்து சொகுசு கப்பல் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story