குடும்பத்தோடு தீ வைத்து எரிப்பு....குழந்தைகளோடு பிணமாக கிடந்த அதிர்ச்சி - கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்
கடலூர் செல்லாங்குப்பம் அருகே 2 பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் வீட்டில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்,
கடலூர் செல்லாங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் - தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 8 வயதில் ஹாசினி என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் தமிழரசியின் அக்கா தனலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் சர்குருவை விட்டு தங்கை வீடான தமிழரசி வீட்டிற்கு 4 குழந்தையுடன் வந்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் சர்குரு தனது மனைவி இன்று சந்தித்து சண்டை போட்டுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் கொண்டு வந்த பெட்ரோலை தனலட்சுமி மற்றும் அவரது 4 மாத குழந்தை மீதும் தடுக்க சென்ற தனலட்சுமியின் தங்கை தமிழரசி மற்றும் அவரது 8 மாத பெண் குழந்தை ஹாசினி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.பின்னர் சர்குருவும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் 2 பச்சிளம் பெண் குழந்தை உட்பட தமிழரசி மற்றும் சர்குரு உள்ளிட்ட 4 பேரும் தீயில் எரிந்து உயிரிழந்தனர். இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தனலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி உறவினர் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் குடும்பத்துடன் தீயில் கருகிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.