மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட இருந்த விலையில்லா மடிக்கணினிகள் திருடு போனதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - டிடிவி தினகரன்
மடிக்கணினிகள் வைத்திருக்கும் அறையை சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் 140 பள்ளிகளில் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட இருந்த விலையில்லா மடிக்கணினிகள் திருடு போனதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதுவரை 140 பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்களை பதிவு செய்துள்ளார்.
ஏழை, எளிய மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த இதயதெய்வம் அம்மா அவர்கள், பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வி சார்ந்த தேடல்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அம்மா அவர்கள் தொடங்கிய இந்த பொன்னான திட்டத்தை ஆட்சிக்கு வந்தபின் சரிவர செயல்படுத்தாத திமுக அரசின் அலட்சியப் போக்கால், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் திருடுபோனதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமான விலையில்லா மடிக்கணினி திட்டத்தை இனிவரும் காலங்களில் முறையாக செயல்படுத்துவதோடு, மடிக்கணினிகள் வைத்திருக்கும் அறையை சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.