பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி


பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் மேற்கு மண்டல பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. 147 பேர் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டி

மேற்கு மண்டலத்தில் பெண் போலீஸ் முதல் உயர் பெண் அதிகாரிகள் வரையிலான துப்பாக்கி சுடுதல் போட்டி சேலம் அழகாபுரம் நகரமலை அடிவாரம் துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மேற்பார்வையில் நடந்த போட்டியை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

இதில் சேலம் மாநகரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல் படை 7-ஆம் அணி (போச்சம்பள்ளி) மற்றும் சேலம் மாநகர ஆணையர் உட்பட 23 பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் 124 பெண் போலீசார் என மொத்தம் 147 பேர் கலந்துகொண்டனர்.

தையல்நாயகி முதலிடம்

பிஸ்டல் மற்றும் ரிவால்வர் பிரிவில் முதலிடத்தை சேலம் ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி பிடித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, சேலம் மாநகர உதவி கமிஷனர் ஆனந்தியும், மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் 2-வது இடத்தையும், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

ஈரோடு பெண் போலீஸ் கீதா முதலிடமும், சேலம் மாநகரம் முதல்நிலை பெண் போலீஸ் ராஜேஸ்வரி 2-வது இடத்தையும், சப்-இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி 3-வது இடத்தையும் பெற்றனர். இன்சாஸ் பிரிவில் ஈரோடு ராமேஸ்வரி முதலிடமும், ஈரோடு பவதாரணி 2-வது இடமும், ஈரோடு தமிழழகி, நந்தினி ஆகியோர் 3-வது இடத்தையும் பெற்றனர்.

இன்று

துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது.


Next Story