நெல்லை - திசையன்விளை இடையே இடைநில்லா பஸ்களை இயக்கக்கோரி கடையடைப்பு
நெல்லை - திசையன்விளை இடையே இடைநில்லா பஸ்களை இயக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க அவசர கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நெல்லை-திசையன்விளை இடையே என்ட் டூ என்ட் என்ற பெயரில் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. நெல்லையில் இருந்து திசையன்விளைக்கு தினமும் காலை முதல் இரவு வரை தலா 10 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த இடைநில்லா பஸ்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடக்கும் இந்த பஸ்களில் ஏராளமான மாணவ-மாணவிகள், அலுவலர்கள், வியாபாரிகள் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த பஸ்களில் கூட்டம் எப்போதும் அலைமோதும்.
இந்த நிலையில் இடைநில்லா பஸ்கள் கடந்த சில நாட்களாக நாங்குநேரி பஸ்நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் சுமார் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை பயண நேரம் கூடுகிறது. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே முன்பு போல நெல்லை - திசையன்விளை என்ட் டூ என்ட் பஸ்களை இடைநில்லாமல் இயக்கக்கோரி திசையன்விளை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.