மேட்டூரில் மீன்களுக்கு தட்டுப்பாடு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


மேட்டூரில் மீன்களுக்கு தட்டுப்பாடு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியதால் மீன்கள் பிடிக்க முடியாத நிலையில், மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சேலம்

மேட்டூர்:-

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியதால் மீன்கள் பிடிக்க முடியாத நிலையில், மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் மீன் பிடிக்கும் உரிமம் மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த சங்கத்தின் மூலம் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மேட்டூர் அணையில் மீன் பிடிப்பதற்கான உரிமம் பெற்று மீன் பிடித்து வருகிறார்கள்.

உரிமம் பெற்ற மீனவர்கள் மேட்டூர் அணையில் பிடிக்கும் மீன்களை மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் கொள்முதல் செய்து வருகின்றனர். குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள மீன் கொள்முதல் மையங்களுக்கு தங்கள் வாகனம் மூலம் சென்று அந்தந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பிடிக்கும் மீன்களை அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு எடுத்து வருவார்கள்.

750 கிலோமீன்கள்

இதைத்தொடர்ந்து மேட்டூர் பூங்கா அருகே அமைந்துள்ள மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மீன் விற்பனை மையத்தில் பொதுமக்களுக்கு மீன்களை விற்பனை செய்கிறார்கள். பொதுவாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களிலும், அணை நீர்மட்டம் அதிகரிக்கும் நேரங்களில் தண்ணீரின் விசை அதிக அளவில் இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான வலைகளை போட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பரிசலில் ஆற்றில் கடக்கவும் முடியாது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் அணையில் பிடிபடும் மீன்களின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். இதன் அடிப்படையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் இருந்த நிலையில் மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு நாள் ஒன்றுக்கு 600 கிலோ முதல் 750 கிலோ வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தற்போது அணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடும் நிலையில் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு நாள் ஒன்றுக்கு 200 கிலோ மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் மேட்டூர் மீனை சுவைக்க போட்டி போட்டுக்கொண்டு வரும் அசைவ பிரியர்கள் அனைவருக்கும் மேட்டூர் அணை மீன் கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் நிலை உருவாகி உள்ளது.

அணை நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், மீன்கள் விற்பனைக்கு குறைவாக கொண்டு வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story