தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்


தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்
x

நாகர்கோவிலில் 6-ந் தேதி நடைபெறும் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் 6-ந் தேதி நடைபெறும் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

தோள்சீலை போராட்ட பொதுக்கூட்டம்

200 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது.

இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை பெண்கள் தொடங்கினர். பின்னர் இந்த போராட்டம் தீவிரமடைந்து இந்த முறையை நீக்க காரணமாக அமைந்தது.

இதனை நினைவுப்படுத்தும் விதமாக 200-வது ஆண்டு நிறைவு தோள்சீலை போராட்ட பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் 6-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அவருடன் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், பாலபிரஜாபதி அடிகளார், விஜய் வசந்த் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பெல்லார்மின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கருணாநிதி சிலை திறப்பு

பொதுக்கூட்டம் முடிந்ததும் அன்று இரவு நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் காலையில் நாகர்கோவில் பாலமோர் சாலையில் ரூ.11.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள மாவட்ட தி.மு.க. அலுவலக வளாகத்தில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷின் சொந்த செலவில் ள 14½ அடி உயரத்தில் (பீடம் 6 அடி, சிலை 8½ அடி) அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஐ.ஜி. ஆய்வு

இந்த நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அக்சரா கார்க் நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான நாகராஜா கோவில் திடலுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் மாநகராட்சி புதிய கட்டிடம், தி.மு.க. அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இந்த ஆய்வு நடந்தது.

இதைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகைக்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story