மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களின் தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும்

மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களின் தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும் ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
திருப்பூர்
மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களிடம் உள்ள தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும் என்று 300-வது கிராமிய சேவைத்திட்ட தொடக்க விழாவில் ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
கிராமிய சேவை திட்டம்
உலக சமுதாய சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 299 கிராமங்களில் கிராமிய சேவைத் திட்டம் தொடங்கப்பட்டு 279 கிராமங்களில் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் கணக்கம்பாளையம் வாஷிங்டன்நகரில் 300-வது கிராமிய சேவைத் திட்டம் தொடக்கவிழா அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் ஸ்கை சுந்தரராஜன் வரவேற்றார். ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அறங்காவலர் வி.எம்.கந்தசாமி, திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மண்டல இணை இயக்குனர் பழனிச்சாமி, வி.எஸ்.பி. துணைத் தலைவர் அர்ஜூனன், வாவிபாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் மோகன், செயலாளர் மனோகரன், பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் ஜி.மோகன், கிருஷ்ணா மஹால் நிர்வாக இயக்குனர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் வாழ்த்தி பேசினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் வி.எஸ்.பி. துணைத்தலைவர் முருகானந்தம் திட்ட அறிமுகவுரையாற்றினார். விழாவுக்கு உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
சமூக வலை தளங்கள்
செல்போனில் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு பலமணி நேரம் செலவிடுகிறோம். ஆனால் ஒரு அரைமணி நேரம் யோகாவுக்கு செலவிட நாம் தயாராக இல்லை. எந்த சூழ்நிலையிலும் மனதை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதுதான் மனவளம். அதுவே மனநலம். மனஅமைதி இல்லையென்றால் மற்றவர்களிடம் உள்ள தவறு மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
பணமும், பதவியும் வரும்போது இருக்க வேண்டியது பணிவு மட்டும்தான். பணிவு இருப்பவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் பேசும்போது, மனிதனுக்கு இருக்கும் கர்வம், கோபம், பொறாமை ஆகியவற்றை நீக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. நல்ல பண்புகள், குணநலப்பேறு அடைவதற்கு பயிற்சிகள் உள்ளது. மக்கள் அறநெறிப்படி வாழ்ந்தால்தான் இன்பமாக வாழ முடியும். அறத்திற்கு புறம்பாக வாழ்ந்தால் துன்பம் வரும் என்ற இறைநீதி இருக்கிறது என்றார்.