சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா; கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை -சட்டசபையில் அமைச்சர் தகவல்


சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா; கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை -சட்டசபையில் அமைச்சர் தகவல்
x

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதாவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பியும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் எதற்கும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வருகிறது.

'நீட்' விலக்கு மசோதா

இந்த விவகாரத்தால் தமிழக மாநில நிர்வாகத்துக்கும், கவர்னர் மாளிகைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 'நீட்' தேர்வு விலக்கு குறித்த சட்ட மசோதா, சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீண்டநாள் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்த அந்த மசோதாவை சில விளக்கங்கள் கோரி அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார்.

எனவே மீண்டும் சட்டசபையில் 'நீட்' விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசின் துறை தொடர்புடையது என்பதால் அந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பி வைத்தார். இதுவரை அந்த மசோதா நிலுவையில் உள்ளது.

'ஆன்லைன்' சூதாட்டம்

அதுபோல, ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்து வந்ததால், அதற்கு எதிரான சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சட்ட மசோதாவும் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு சில விளக்கங்கள் கேட்டு அந்த மசோதா அரசுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து நேரடியாக கவர்னர் அலுவலகத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து மீண்டும் அந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கண்டனம்

இரண்டாம் முறை அனுப்பப்படும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்ற நிலையில், அதற்கான கால அவகாசம் இல்லாத நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கவர்னர் அலுவலகத்தில் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அது நிராகரிக்கப்பட்டு விட்டதாகத்தான் அர்த்தம் என்று கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேசியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போல் ஆகிவிட்டது.

எனவே பல்வேறு அரசியல் கட்சிகள் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தன.

'ஆன்லைன்' சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல்

அதைத்தொடர்ந்து, கவர்னரை பற்றி விமர்சிக்கக் கூடாது என்ற அவை விதியை தளர்த்தி, சட்டசபையில் கடந்த மாதம் 23-ந் தேதி கவர்னரின் செயல்பாட்டுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது பேசிய எம்.எல். ஏ.க்கள் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கருத்துகளை பதிவு செய்தனர்.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத நிலையில் அன்றைய தினமே ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென்று ஒப்புதல் அளித்தார். உடனே அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஆன்லைன் சூதாட்ட தடை அமலுக்கு வந்தது.

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்

அதேசமயம் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் என்ற மசோதாக்கள் உள்பட 14-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள், கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெறுவதற்காக நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப்பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஆண்டு சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு முடிவு எடுத்திருந்தது. தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தை தவிர, பிற அனைத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னர் இருந்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்-அமைச்சரே இருப்பார் என்றும் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஒப்புதல் அளிக்கவில்லை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதுவும் கவர்னர் மாளிகையில் கிடப்பில் உள்ளது என்று சட்டசபையில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2.9.2021 அன்று முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதற்கான மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினார். கவர்னருக்கும், சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டை என்றே தெரியவில்லை. சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு அவர் ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக இருப்பில் வைத்திருந்தார்.

பின்னர், மீண்டும் முதல்-அமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பிய பிறகு இரண்டாவது முறையும் அந்த மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றி அனுப்பியதற்கு பிறகும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. நிச்சயம் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிற்கு வந்தே தீர வேண்டும் என்கிற நிலையில், சமூக ஆர்வலர்கள் மட்டுமல்ல, சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருமே விரும்பி கொண்டிருக்கிறார்கள்.

கவர்னர் அதை செய்ய வேண்டும் என்று இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளிக்கிறபோது அவரை நாங்கள் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.


Next Story